Wednesday, March 16, 2016


பூர்வீகம் இரண்டாம் பகுதி......

நான் கும்பகோணத்திலிருந்து திருபுவனம் வழியாக ஆடுதுறை செல்லும் பேருந்தில் அமர்ந்து நடத்துனரிடம் திருபுவனத்திற்கு ஒரு பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு காலியான இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.  திருபுவனத்தைப் பற்றிய நினைவுகளில் அமிழ்ந்தேன். பேருந்தும் நகர்ந்தது!

அது ஒரு அமைதியான கிராமமாகத்தான் இருந்தது.  பட்டுப் புடவைக்கு பேமஸ், அதன் கடைத்தெருவில்தான் பேருந்துகள் நிற்கும்.  அங்கு போஸ்டாபீஸ், ஒரு பாய் டீக்கடை அதன் அருகில் ஒரு பலசரக்குக் கடை, அருகாமையில் ஒரு துணிக்கடை பாஷ்யம் அய்யங்காரால் நடத்தப்பட்டது. பக்கத்தில் ஒரு காய்கறிக்கடை.  எதிர் வரிசையில் சொக்கலிங்கம் பிள்ளையின் பாண்டுரங்க பஜனை மடம், அதன் அருகில் பஞ்சர் ஒட்டப்படும் என்ற சிலேட்டு தொங்கவிடப்பட்ட ஒரு சைக்கிள் கடை.

இவ்வளவுதான் கடைத்தெரு! அதன் மூலையில் வேலியின் பாதுகாப்பில் வயதான சிவன்கோயில் தேர்! அதைச்சுற்றி அருகில் இருக்கும் கிராமத்திலிருந்து வந்த வயதான ஒரு மூதாட்டி கொண்டுவந்த முளைக்கீரை வாழைக்காய், வாழைப்பூ, அவரை, பாகற்காய், வாழைத்தண்டு சகிதமாய் தரையிலேயே தனது பல்பொருள் அங்காடியை நடத்தி கொண்டிருந்தாள். அவள் அருகிலேயே சற்று தள்ளி சொர்கம் புகுந்த மீன்களும் வரிசையாக அடுக்கப்பட்டு விசிறியின் காற்றை உணராமல் மீளா உறக்கத்தில் உறங்கின.

இரண்டு மூன்று ஆடுகள் டீக்கடையில் ரசிகர்கள் வீசும் வாழைபழத்தோலுக்காக ஆவலுடன் காத்திருந்தன. திருபுவன வாசிகள் பதட்டப்படாதவர்கள் என்றே தோன்றியது, சிலர் ஒரு கையில் புகையுடன் மறு கையில் டீகிளாஸ் ஏந்தி,  தொங்கவிடப்பட்ட செய்திச்சுருக்கத்தை அசைபோட்ட வண்ணம் ஆழ்ந்திருந்தனர். மற்றும் சிலர் வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவி மீதத்தை அங்கிருந்த மூங்கிலுக்கு பூசி மகிழ்ந்தனர். இருவர் வாழைப்பழ தாரிலிருந்து பழங்களைப் பிய்த்து அதன் தோலை அருகில் ஆவலுடன் அவர்களையே  பார்த்துக்கொண்டிருந்த ஆடுகளுக்கு கொடுத்து தருமம் சம்பாதித்தனர்!  அப்போது ஒண்ணா நம்பர் ஆடுதுறை பேருந்து பலத்த ஓசையுடன் வந்து நின்றது! அனைவர் கண்களும் பேருந்தை நோக்கி திரும்பின!

இறங்கியவரில் பலர் ஊர்வாசிகளுக்கு புதியவர் அல்ல என்றே எனக்குத் தோன்றியது ! அவர்கள் நின்றுகொண்டிருந்தவர்களிடம் குசலம் விசாரித்துவிட்டு  தன் நடையைக்கட்டினர். வேறுசில புதியவர் பட்டுப் புடவை வாங்க வந்திருந்தனர். அவர்களுக்கு முன்பே கடைகளின் பெயர்கள் பரிச்சயம் போல் தெரிந்தது. அவர்களுக்கு ஊர்வாசிகள், வழிகாட்டி தங்கள் ஆலோசனையும் இலவசமாக கொடுத்தனர். தங்கள் சம்பாஷணைக்கு நடுவே வாயில் போட்ட வெற்றிலைச்சாற்றை தாரளமாக ரோட்டில் பரப்பினர்!

நானும் அதே பேருந்திலிருந்துதான் இறங்கி எனது வீட்டை நோக்கி நடையைக்கட்டினேன்.வழியில் சாலையின் இருபுறமும் வண்ணக்கோலங்களில் பட்டு நூல் நீட்டப்பட்டு நீவிவிடப்பட்டது! ஆடவரும் பெண்டிரும் குழந்தைகளுடன் இதில் ஈடுபட்டிருப்பதைப் பார்துக்கொண்டே நடந்தேன். என்ன இப்பத்தான் ஊர்லேந்து வரியா? என்ற கேள்வி சரமாறியாக எழுந்தது! நானும் அலுக்காமல் பதில் அளித்துக்கொண்டே நடந்தேன்!

ஒருவழியாக வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்த்தேன்.  காவேரி எங்கள் வீட்டில் அம்மாவின் வேலைகளில் உதவும் மூதாட்டி அந்த வயதிலும் வாயிலில் சாணத்தை தெளித்து லாவகமாக பெரியதோர் மாக்கோலம் இடுவதை சற்று நேரம் வியப்புடன் பர்த்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். சென்னைக்கும் இந்த ஊருக்கும் என்ன ஒரு வேறுபாடு? சென்னையில் மக்கள் எதையோ தேடித் தேடி ஓடுகின்றனரோ?  இந்த எண்ணம் என் மனத்தில் நிழலாடியது.
உள்ளே நுழைந்ததும் அம்மாவின் குரல் என்னை எண்ண ஓட்டத்தை விடுத்து  யதார்தத்துக்கு திருப்பியது.

ஏண்டா இப்படி கறுத்து போய் இருக்க? இது என் பாட்டியின் கேள்வி? என் வீட்டாருக்கு நான் அரவிந்த்சாமி போல் கலராய் இருக்கிறேன் என்ற நினைவாய் இருக்கலாம்! அப்பா எப்போதும் வார்தைகளை அளந்தே பேசுபவர் அதனால் அவர் கேட்டது எத்தனை மணிக்கு பஸ் ஏறினே என்ற கேள்வி மட்டுமே! அப்போதுதான்  ராமசாமிக் கோனார் உள்ளே நுழைந்தார். என்னைப் பார்த்து என்ன பெரிய தம்பியா வந்திருக்க என்ற கேள்விக்கணை தொடுத்தார். எங்களை அப்படித்தான் பாகுபாடு செய்து தரம் பிரித்திருந்தனர்.  இதன் இடையில் அம்மா என்னை அவசரப்படுத்தினாள், கிடுகிடுன்னு போய் சூடா ஒரு சொம்பை தலைலே விட்டுண்டு சாப்பிடவா, ஒனக்கு பிடிச்சதாத்தான் தளிகை பண்ணியிருக்கேன்! என்று. 

நானும் அவள் சொன்னதை அக்ஷரம் பிசகாமல் செய்து முடித்து சந்தியாவந்தனத்தையும் அதே கதியில் பூர்த்தி செய்து பெருமாள்உள் வாசலில் நேப்பாளி கூர்கா இரவில் பாரவுக்கு வருவது போல நம் சம்ப்ரதாய ஸலாம் அடித்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தேன்.

சூடான பலாக்கொட்டை போட்ட பருப்புக்குழம்பு, கீரை மசியல், மணத்தக்காளி வத்தல் மற்றும் மிளகு ரசத்துடன் சாப்பட்டை ஒரு பிடி பிடித்தேன். எப்போதும்  நானும் அம்மாவும் சாப்பாட்டுக்கடையை முடித்துக்கொண்டு பின் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே ஊர் நடப்பை அலசுவது வழக்கம். அன்றும் அவ்வாறே! எங்கள் சம்பாஷணை ராத்திரிக்கு என்ன சமயல்பண்ணி சாப்பிடலாம் என்ற ஒரு கேள்வி எழுப்பி அடைமாவு அரைத்து வைத்திருந்ததால் அதயே மெனுவாக தேர்ந்தெடுத்ததுடன் முடிவடைந்தது. வீடு இப்பொது களைகட்டியிருந்தது.

எங்கள் வீட்டைப்பற்றி உங்களுக்கு சில செய்திகள் சொல்லி ஆகவேண்டும். அது ஒரு ஆறு கட்டு வீடு. முன்பக்கத்தில் இரண்டு திண்ணைகள், வாசல்கதவு அதையும் தாண்டி உள்ளே வந்தால் நடையின் ஒரு பக்கத்தில் சிறு திண்ணை. மறுபக்கம் மரத்தூண்கள் தாங்கிய கூரையுடன் ரேழி, அங்கிருந்து தான் பெரிய அய்யங்கார் ஜவுளிக்கடை இயங்கியது. இந்த ரேழி தாழ்வாரத்தின் மூலம் உள் கூடத்துடன் இணைந்து அதன் பின் தளிகை உள் எனப்படும் சமயல் அறையில் முடிவடையும். தளிகை உள்ளின் ஓரத்தில் பெருமாளுக்கென்று ஒரு அறை, உள் கூடத்தில்தான் ஊஞ்சல். தாழ்வாரத்தின் பக்கவாட்டில் திறந்த முற்றம், அதில் ஒரு மல்லிகை கொடியின் பந்தல், துளசிமாடம், ஜகடை சகிதம் ஒரு கிணறும் உண்டு.

அதன் பின் பின்கட்டை இணைக்க ஒரு நடை அதையும் தாண்டி பட்டுநூல் சாயம் பூசும் சாய அடுப்பு அதுவே விசேஷ காலங்களில் கோட்டை அடுப்பாகவும் உருவெடுக்கும். இதைக் கடந்தால் மாட்டுக்கொட்டகை இரண்டு வரிசைகளில் மாடுகள் கட்டப்பட்டு நடுவில் ஒரு முற்றம் அதில் ஒரு வைக்கோல் போர், இதுவரை வீட்டின் கட்டுமானம் இதைத்தாண்டினால் வண்டிக்கொட்டகை மற்றும் தோட்டம். இந்தத்தோட்டம் பின் தெருவில் முடிந்துவிடும்!

அப்போதெல்லாம் கரண்ட்கட்டு உண்டு, அதனால் ராத்திரி சாப்பாட்டை முடித்துக்கொண்டு வீட்டில் உள்ளோர் முற்றத்திற்க்கு குடியேறிவிடுவோம். சிலசமயங்களில் சாப்படே அங்குதான். பாட்டி மோர்சாதத்தை பிசைந்து அதிலேயே மெந்தியக்குழம்பையும் விட்டு மாவடுவுடன் எங்கள் கைகளில் போட்டுவிடுவார், நாங்கள் நிலா வெளிச்சத்தில் அதை ருசித்து சாப்பிடுவோம்!   

ஜவுளிக்கடையில் நிறைய பேர் வேலைபார்த்தனர் அவர்களில் சிலர் கிருஷ்ணைய்யர், பெரிய குப்பு, சின்ன குப்பு, வெங்கட்ராமன் ஆகியோர். தவிர வந்துபோவோரும் பலர் உண்டு. அவர்களில் வித்யாசமான பெயர்கொண்டவரும் சிலர்,  புலி கிருஷ்ணையர், செங்கோடை, சின்னக்காவடி போன்றோர்.

நெசவாளர்கள் பட்டு நூல் மற்றும் ஜரிகை வாங்கிப்போக குழுமி இருக்கும்போது அந்த இடம் மினி கடைத்தெருவைப்போல் களை கட்டியிருக்கும்!