Sunday, July 24, 2016

அர்சகரும் காப்பியை ருசித்துவிட்டு அருகில் இருந்த சொம்பிலிருந்து தீர்த்தத்தை சரித்து ஆசமனம் செய்து தன் மேல் வேஷ்டியால் துடைத்துவிட்டு சம்பாஷணையை தொடரந்தார் . என் பாட்டி மாமாவின் வருகையை அறிவித்து பாம்பு பஞ்ஞாங்கத்தை அவர் கையில் கொடுத்து இவா தாத்தாவின் திதி என்னிக்கு வருகிறது பார்க்கா, என்று தன் கோரிக்கையை முன்வைத்தார். அவரும் மூக்கு கண்ணாடியை துடைத்து விட்டுக்கொண்டே கிருஷ்ணபக்ஷ சதுர்திதானே என்று கேட்டுவிட்டு பக்கங்களை புறட்டினார்.புரட்டாசி மாசம் எட்டாம் தேதி வருவதாகக் கணித்தார்.

அதன்பின் அவரது கோரிக்கை, உங்க மச்சினரிண்ட சொல்லி சந்தானத்துக்கு பாங்குலே ஒரு உத்யோகத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லுங்கோ என்று முத்தாய்பு வைத்தார்.

பாட்டி அதற்கு, அவர் வரச்சே சொல்லி அனுப்பரேன் நீங்களும் புள்ளையாண்டானை அழச்சுண்டுவந்து பாருங்கோ எல்லாம் நல்லபடியா முடியும் என்று சொன்னார். சந்தானம் அவரது மூன்றாவது பையன் பிஎஸ்ஸி முடித்துவேலை தேடிக்கொண்டிருந்தான்.

பத்மாசனி எப்படி இருக்கா இது பாட்டியின் கேள்வி, அதற்கு அவர் இவன் கவலைதான் அவளுக்கு, இவனுக்கு பகவான் ஒரு வழிகாட்டிடான்னா பூமாவிற்கு வரனைத்தேடலாம் என்று முடித்தார். பாட்டி அதற்கும் ஒரு பதில் தயாராக வைத்திருந்தாள். யாருக்கு பிராப்தம் இருக்கோ அவாளுக்கு மொதல்ல நடக்கும் நீங்க வரச்சே அவ ஜாதகத்தையும் கையோட எடுத்துண்டு வாங்கோ நம்படவா பசங்க எத்தனையோ பாங்கு வேலேல சேர்ந்து கல்யாண வயசுலே இருப்பாளே என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது எப்படி என்பதை நினைவூட்டினார்.

பத்மாசனி அவர் மனைவி. இப்படியாக அவர் கிளம்பியவுடன், வீட்டுப் பெரியவர்கள் சிறிது நேரம் குட்டித்தூக்கம் போட ஆயத்தமாயினர். என் தலக்கொசர கடடையை செத்த கொண்டுவாடா, இந்த வாசப்படிங்கிட்ட நன்னாஜில்லுன்னு காத்து வரது, இது பாட்டியின் அன்புக்கட்டளை. மற்றவரும் ஊஞ்சல், ஈஸிசேர் என கிடைத்த இடத்தில் உறக்கத்தின் சொந்தமானார்கள்.மெல்லிய குறட்டையின் தனி ஆவர்தனங்களை கேட்க முடிந்தது. நானும் தூக்கம் வராமல் தாழ்வாரத்தில் உள் மல்லிகை கொடியில் லேட்டாக வந்து தேனைத்தேடும் பட்டாம்பூச்சியை வேடிக்கை பார்த்து நேரத்தைக் கழித்தேன்.