Saturday, January 23, 2016



பூர்வீகம்.

ஸ்வாமீ உமது பூர்வீகம் என்ன? என்ற கேள்வி என்னை என் கிரமத்துக்கு கொண்டு சென்றது. 

காலையில் என் மனைவி கொடுத்த காப்பியைக் குடித்துவிட்டு பிறகு அவசரமாகக் குளித்து சந்தியாவந்தனத்தை ஒருவாறாக இரண்டு செல்போன் கால்கள், இஸ்திரிக் காரனின் அழைப்பு, கதவிடுக்கில் ஹிண்டு பேப்பர் விழும் சத்தம் இவற்றின் நடுவில் செய்து முடித்தேன். 

பிறகு பெருமாளையும் அதே அவசரத்தில் பூஜித்து என் மனையாள் கொடுத்த ஓட்ஸை முழுங்கிவிட்டு கையில் அவள் கொடுத்த க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் டப்பாவில் அடைகலம் புகுந்த அரிசி உப்புமாவையும், துணி மணிகளையும் ஒரு பையில் திணித்துக்கொண்டு, செல்போன் மணிப்பர்ஸ் சகிதமாய் கோயம்பேடு சென்று கும்பகோணம் அரசு சொகுசுப்பேருந்து எனப்பெயரிடப்பட்ட பேருந்தில் அமர்ந்தேன். 

அன்று அதிக வெய்யில் இல்லை, பேருந்தும் புறப்பட்டது.
என் பயணம் ஒரு இசைப்பயணமாகவே இருந்தது. பேருந்தில் இருந்த எல்லா உறுப்புகளும் வலையப்பட்டி அவர்களின் தவிலை மிஞ்சி தங்கள் நாதத்தை எழுப்பின! 

நடத்துனரும் என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு டிக்கெட்டை ருசி பார்த்து என்னிடம் கொடுத்தார்.

நானும் கண்ணை மூடி கீதையில் கண்ணன் கூறியபடி ஐம்பொறிகளை அடக்கி மனத்தை ஒருநிலைப்படுத்த முயற்சித்தேன்! அப்போதுதான் நடத்துனர் ஒளிக்காட்சிப்பெட்டியில் ஒரு விசிடியை நுழைக்க அது தன் வயதான காலத்தில் முடிந்தமட்டும் ஒலியையும் ஒளியையும் ஏதோ ஒரு விகிதத்தில் கலந்து கொடுத்தது. 

சிவாஜி ஒரு பேய்படத்தில் நடித்தால் இப்படித்தான் இருந்திருக்குமோ? அதையும் சக பயணிகள் கழுத்து வலியுடன் முயன்று பார்த்தனர்.

நேரம் ஓடியது, சாப்பாட்டு நேரமும் நெருங்கியது, ஓட்டுனர் சாலையோர சிற்றுண்டிச்சாலையில் பேருந்தை நிறுத்தினார். 

ஒலிபெருக்கி கானாப்பாட்டை ராட்சத ஸ்பீக்கர்கள் மூலம் எல்லாப் பேருந்துகளுக்கும் சப்ளை செய்தது.   

சக பயணிகள் மூக்கைப்பிடித்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கி பரோட்டா செய்யும் நபரின் இசை வந்த திசையை நோக்கி நகர்ந்தனர். 

பசியாறிய பயணிகள் தமது இருக்கைகளுக்குத் திரும்பினர், ஓட்டுனரும் அவரது சகாவும் கையில் பார்சலுடன் வாயில் புகையுடனும் அவர்களின் அலுவலக நடப்புகளை அலசினர். 

பின்பு வாயிலிருந்த துண்டு நெருப்பை கீழே போட்டு காலால் அதை அணைத்துவிட்டு டெண்டுல்கர் பௌண்ட்ரி அடித்துவிட்டு அரங்கத்தை சுற்றிபார்ப்பது போல் பயணிகளைப் பார்த்துவிட்டு இருக்கையில் அமர்ந்து ஹாரனை பலமுறை அழுத்தி வண்டியை நகர்தினார். 

அதுவரை சுற்றுச்சூழலில் மூழ்கியிருந்த சில பயணிகள் அவசரமாக ஓடிவந்து அமர்ந்தனர். வண்டியும் கும்பகோணம் நோக்கி பயணித்தது. 

செவ்வாய் கிரகத்துக்கே செல்லும் இன்னாளில் ஏழுமணித்துளிகளுக்கு மேல் பயணித்து ஒருவாறாக கும்பகோணம் பேருந்து நிலையத்தை அடைந்தேன், திருமழிசையாழ்வார் காவிரியையும் அதன் கரையிலுள்ள சோலைகளையும், பறவைகளின் ஓசைகளையும் விவரித்தது என் மனத்திரையில் நிழலாடியது. 

ஆனால் எனது நாசியோ அதை மறுத்தது. நானும் முடிந்தவரை மூச்சை அடக்கி பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறினேன். இல்லை நிச்சயமாக இது அந்த திருக்குடந்தையாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. 

தண்ணீர் இல்லாத கவிரி, சோலைகள் இல்லாத நகரம், மற்றும் பறவைகளில் காகங்கள் மட்டுமே குடந்தையில் எஞ்சியது போலும்! மனிதன் இயற்கையை ரசித்த காலம் போய் கடைகளில் ஏறி இறங்கி ஓய்ந்து போனானோ? 

காவிரி நீரைப்பருகியவன் இன்று குப்பியில் அடைத்த தண்ணீரை பன்னாட்டு நிருவனத்திடம் பெற்று தாகம் தீர்ந்து போனான். சுவற்றில் ஒரு சுவரொட்டி உழைப்பவனை களைப்படைந்தால் அஞ்சால் அலுப்பு மருந்து சாப்பிடச்சொல்லி ஊக்கமளித்தது!

அப்போதுதான் ஒருவர் என்னை நெருங்கி என்ன ஸார் ஊருக்கு புதுஸா? இங்கே நிறைய கோவில் இருக்கு, நவகிரக கோவில்கள் பேமஸ் போய் பாருங்க என்று ஓசி அட்வைஸ் கொடுத்தார். 

ஆராவமுதனின் ஊர் அல்லவோ இது! மீண்டும் ஆழ்வாரை குடந்தைக்கு அழைக்க வேண்டும், அவரால் மட்டுமே குடந்தையை மீட்டு நாரணனிடம் கொடுக்க இயலும். நடக்குமா?  

சாலையில் இறங்கி வேகமாய் நடக்க ஆரம்பித்தேன். சாலையின் இருமருங்கிலும் தமிழ்மொழியின் சாயலே இல்லாத பெயர்ப்பலகைகள் ஒளிவெள்ளத்தில் கண் சிமிட்டின! 

அப்போது தான் திரு சாரங்கபாணிசுவாமி கோயில் செல்லும் வழி என்ற பெயர்ப்பலகை என் கண்ணில் பட்டது. பக்கத்திலேயே பிரும்மாண்டமான போஸ்டர் “கலியுகதெய்வமே! மழையினில் மக்களைக் காத்த கரமே! என்று முழங்கிக்கொண்டிருந்தது. 

எல்லாக்கோயில்களும் வண்ணப்பூச்சில் மகாமகத்தையொட்டி மேக்கப் செய்துகொண்டிருந்தன. பெரிய அறிவிப்புப்பலகைகள் திருப்பணிக்கு ஆன செலவை பட்டியலிட்டன! இதேபோல் அரங்கனுக்கு மன்னர்களும், அவனது அடியார்களும் செய்த திருப்பணிகளை பட்டியலிட்டால், திருவரங்கமே நிறம்பிவிடுமே! ஆனால் அக்காலத்தில் ஊடகம் மற்றும் விளம்பரத்திற்கு தனியான கல்லூரி படிப்பு இல்லையே! அதனால் தான் அவர்கள் இவ்வாறு பல பட்டியல்கள் இடவில்லையோ மாறாக கோவில் சுவற்றுக்கற்களில் பதித்தனரோ? 

 ஒருவழியாக கோயில் வளாகத்தை அடைந்தேன். என்னை எதிர்கொண்டது இன்றைய அரசு செயல்திட்ட அன்னதானத்தின் உபயதாரர் பெயர் பட்டியல் மற்றும் மெனு! திருமங்கை மன்னனும் ஒவ்வொரு நாளும் ஆயிரம் வைணவ அடியார்களுக்கு உணவிட்டாரே!

யார் அவர் பெயரை எழுதிவைத்தனர்? 
போகட்டும் அது அந்தக்காலம்! உள்ளே ஆராவமுதனை கண்ணாரக்கண்டு மனம் குளிர்ந்து அவன் உடன் உறை கோமளவல்லியையும் வணங்கி, அமுதனுக்கு ஆரவாரமில்லாமல் அழகிய திருக்கோயில் எழுப்பிய அரசர்களையும், அடியார்களையும் மனத்தால் வணங்கி பிரிய மனமிலாமல் வெளியே நடந்தேன்.

To be continued......








No comments:

Post a Comment